திருப்பூர் பெரியதோட்டம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி

திருப்பூர் பெரியதோட்டம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியானான்.

Update: 2017-11-16 22:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், மாநகருக்குட்பட்ட பல இடங்களில் காய்ச்சலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியை சேர்ந்தவர் ஷேக்பரித்(வயது 28). இவர் மரவேலை செய்து வருகிறார். இவரது மகன் முகம்மது பைசல் (3). இவனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் காய்ச்சல் அதிகரித்ததை தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அவனை கடந்த 14-ந்தேதி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

சிறுவன் பலி

அங்கு அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவனது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே சிறுவனுக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக கூறி அவனை மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அனுப்பிவைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் முகம்மது பைசல் நேற்று இறந்தான்.

இதையடுத்து மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் பெரியதோட்டம் பகுதிக்கு சென்று சுகாதார பணிகளை மேற்கொண்டனர். தங்கள் பகுதியில் சுகாதாரம் என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் இங்கு தேங்கியுள்ள குப்பைகளையும், சாக்கடை கழிவுநீரையும் அகற்றி தொடர்ந்து சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

அடிக்கடி மருத்துவ முகாம்களையும் நடத்த வேண்டும் என்றும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்