வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து கோடநாடு எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை

வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் பிடிபட்ட ஆவணங்கள் குறித்து கோடநாடு எஸ்டேட் பொது மேலாளர் நடராஜனிடம், கோவையில் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது.;

Update: 2017-11-16 23:00 GMT
கோவை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட் உள்ளது. இதன் அருகில் சசிகலாவுக்கு சொந்தமான கிரீன் டீ எஸ்டேட் இருக்கிறது. கோடநாடு எஸ்டேட் பொது மேலாளர் நடராஜன் என்பவர் கிரீன் டீ எஸ்டேட் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார்.

கடந்த 9-ந் தேதி கிரீன் டீ எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கோடநாடு எஸ்டேட் பொது மேலாளர் நடராஜனிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண் டனர்.எஸ்டேட்டில் இருந்து அதிகாரிகள் ஒரு சூட்கேஸ் மற்றும் 4 பைகளில் ஆவணங்களை கைப்பற்றினர். இந்த சோதனையில் சென்னை, மன்னார்குடி, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள திராட்சை தோட்டம் குறித்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை முதல் கோடநாடு மற்றும் கிரீன் டீ எஸ்டேட் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில் கிரீன் டீ எஸ்டேட் அதிகாரி பழனிகுமார் உள்ளிட்ட 20 பேர் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

இதனிடையே எஸ்டேட் பொது மேலாளர் நடராஜனிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் அவரை அனுப்பி வைத்தனர். மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடராஜனுக்கு சம்மன் அனுப்பினர்.

இதனையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு கோவை ரேஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நடராஜன் மீண்டும் வந்தார். அவரை தனி அறையில் வைத்து காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை மொத்தம் 7 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது நடராஜன் பெயரில் 60 ஏக்கர் எஸ்டேட் இருப்பது குறித்தும், தேர்தலின் போது பணபட்டுவாடா நடந்தது குறித்தும், கோடநாடு, கிரீன் டீ எஸ்டேட் எந்த முறையில் வாங்கப்பட்டது?, அதை யார் நிர்வகித்து வருகிறார்கள்?, அதன் கணக்கு தொடர்பான விவரங்கள் எந்த வங்கியில் உள்ளது என கேள்விகளை கேட்டனர்.

மேலும் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது எஸ்டேட் தொழிலாளர்கள் மூலம் எவ்வளவு பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என்று கூறி, வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று மாலையில் அவரை அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்