மேட்டூர் அணை கிழக்கு-மேற்கு கரை கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பு 45 ஆயிரம் ஏக்கர் பாசனவசதி பெறும்

மேட்டூர் அணை கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

Update: 2017-11-16 22:45 GMT
மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து குறித்த நாளான ஆகஸ்டு மாதம் 1-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்துக்கு கைகொடுக்கவில்லை. இதன் காரணமாக கால்வாய் பாசனத்துக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிரம் அடைந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 3,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அதே நேரத்தில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை 85 அடியாக இருந்தது. இதற்கிடையே, டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை அதிகரித்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேட்டூர் அணையின் மூலம் பயன் பெறும் கால்வாய் பாசன விவசாயிகள் தங்கள் பாசன தேவைக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 17-ந் தேதி (இன்று) முதல் 13 நாட்களுக்கு மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். அதன்பேரில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கால்வாய் பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன்மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.96 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,797 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 

மேலும் செய்திகள்