திருவொற்றியூரில் 4–வது ரெயில்வே தண்டவாளம் பணிக்காக 54 வீடுகள் இடித்து அகற்றம்

திருவொற்றியூரில் 4–வது ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த 54 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

Update: 2017-11-16 22:30 GMT

திருவொற்றியூர்,

சென்னை கொருக்குப்பேட்டையில் இருந்து எண்ணூர் வரை 4–வது வழித்தடத்தில் ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்கு இடையூறாக ரெயில்வே தண்டவாளம் ஓரம் உள்ள வீடுகளை அகற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக நந்திஓடை பகுதியில் இருந்த 130 வீடுகளை இடித்து அகற்றினர்.

இந்தநிலையில் நேற்று 2–வது கட்டமாக தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் திருவொற்றியூர் கிராமத்தெருவில் ரெயில்வே இடத்தில் கட்டப்பட்டு இருந்த 54 வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பெண்கள் கதறி அழுதனர். எனினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. வீடுகளை இழந்த பெண்கள், தங்கள் உடமைகளுடன் தண்டவாளம் அருகே அமர்ந்து கதறி அழுதபடி இருந்தனர்.

வீடுகளை இழந்தவர்களுக்கு கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் சூரங்குடி என்ற இடத்தில் குடியிருப்பதற்கான குடியிருப்பு ஆணையையும் வருவாய்த்துறையினர் வழங்கினர்.

அப்போது விடுகளை இழந்த பெண்கள் கூறும்போது, ‘‘சுமார் 40 ஆண்டுகளாக நாங்கள் இந்த இடத்தில் மாடி வீடுகள் கட்டி வசித்து வந்தோம். தற்போது எங்கள் வீட்டை இடித்து விட்டு மாற்று இடம் மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு ஒதுக்கிய இடத்தில் வீடும் கட்டித்தர வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்