தமிழக கவர்னர் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் த.மா.கா. பொதுச் செயலாளர் விடியல் சேகர் பேட்டி

தமிழக கவர்னர், தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக, த.மா.கா. பொதுச் செயலாளர் விடியல் சேகர் கூறினார்.;

Update: 2017-11-16 20:30 GMT
தூத்துக்குடி,

தமிழக கவர்னர், தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக, த.மா.கா. பொதுச் செயலாளர் விடியல் சேகர் கூறினார்.

இது குறித்து அவர் நேற்று மாலை தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–

தொடக்க விழா


தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி 4–ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருச்சியில் வருகிற 25–ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு பிறகு த.மா.கா. புத்தெழுச்சி பெறும். அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு முன்னேற்பாடாக இந்த பொதுக்கூட்டம் அமையும். இந்த கூட்டத்துக்கு தியாக தலைவர்களின் பெயர்களில் இளைஞர்கள் நினைவு ஜோதி ஏந்தி வருகின்றனர்.

தூத்துக்குடி–திருச்செந்தூர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வருகிறது. ஆகையால் அந்த பகுதியில் மேம்பாலத்தை விரைவில் அமைக்க வேண்டும். பயிர் காப்பீடு தொகை சில விவசாயிகளுக்கு கிடைக்காமல் உள்ளது. விடுபட்ட விவசாயிகளுக்கும் காப்பீடு தொகை வழங்க வேண்டும். தமிழகம் கடந்த 2 ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் தற்போது பெய்த மழையால் சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்த சேதங்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்காமல் வஞ்சிக்கிறது.

மணல் பற்றாக்குறை

தமிழ்நாட்டில் ஆற்றுமணல் பற்றாக்குறையால் கட்டுமான பணிகள் ஸ்தம்பித்து உள்ளன. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை அரசு நிறுத்தி வைத்து உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மணலை அரசு ஆய்வு செய்து, பயன்படுத்துவதற்கு உரியதாக இருந்தால் உடனடியாக விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

அதிகார வரம்பை மீறி...

தமிழக கவர்னர், மாவட்டம் தோறும் ஆய்வு நடத்துவதாக கூறி உள்ளார். இது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல. மாநில உரிமையை பறிக்கும் செயல் ஆகும். கவர்னர் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார். அதனை த.மா.கா. கண்டிக்கிறது. வருமானவரித்துறையினர் டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடைய உறவினர் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர். அரசியல் உள்நோக்கம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்து இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநில செயலாளர் திருவேங்கடம், வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்