பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

நெற்பயிருக்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் வருகிற 30–ந்தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Update: 2017-11-15 23:04 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:–  பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், 2017–2018ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிரை பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி நடப்பாண்டில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,122 வருவாய் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின்கீழ், கடன்பெறும் விவசாயிகள், அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர்.

கடன்பெறா விவசாயிகள், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் காப்பீடு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறாக சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் வரும் 30–ந்தேதி ஆகும். எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு தொகை செலுத்தி தங்களது நெற்பயிரை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்