கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்பட 3 பேர் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்
கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்பட 3 பேர் ஈரோடு கோர்ட்டில் ஆஜரானார்கள்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பிடாரியூரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 20). இவர் பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் படித்தார். அப்போது அதே கல்லூரியில் படிக்கும் ஹேமலதா (19) என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 2013–ம் ஆண்டு பாலாஜியும், ஹேமலதாவும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பிடாரியூரில் உள்ள பாலாஜியின் வீட்டில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். சிறிது நாட்களுக்கு பிறகு அங்கு வசிக்க விருப்பம் இல்லாததால் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து நாமக்கல், மேட்டூர் ஆகிய இடங்களுக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.
இதற்கிடையே ஹேமலதாவின் குடும்பத்தினர் தங்களை தேடுவதை தெரிந்துகொண்ட பாலாஜி அவருடைய நண்பரான பிடாரியூரை சேர்ந்த சரவணன் என்பவரிடம் உதவி கேட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பாலாஜியும், ஹேமலதாவும் கடந்த 22–4–2013 அன்று பெருந்துறை பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் சரவணன் காரில் ஏற்றிக்கொண்டு வெள்ளோட்டில் உள்ள அமுதஅரசு என்பவரின் தோட்டத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கு அமுதஅரசு, சரவணன் ஆகியோர் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜூடன் சேர்ந்து ஹேமலதாவின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது, ஹேமலதாவை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் தாங்கள் கடத்தப்பட்டதை தெரிந்துகொண்ட பாலாஜியும், ஹேமலதாவும் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு கடத்தப்பட்ட காதல் ஜோடியுடன் சரவணனும், அமுதஅரசும் காரில் அங்கிருந்து புறப்பட்டு நம்பியூர் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு சாலையோரம் காரை நிறுத்திவிட்டு சரவணனும், அமுதஅரசும் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது கணவனும், மனைவியும் அவர்களுடைய பிடியில் இருந்து தப்பிக்க முடிவு செய்தனர். இதையடுத்து பாலாஜியும், ஹேமலதாவும் காரில் இருந்து நைசாக இறங்கி தப்பி சென்றனர்.
இதுகுறித்து ஹேமலதா பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ், அமுதஅரசு, சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது பெருந்துறை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், இந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது.
யுவராஜ் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். எனவே வேலூர் சிறையில் இருந்து ஈரோடு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக யுவராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். மேலும், ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் அமுதஅரசுவும், சரவணனும் ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி திருநாவுக்கரசு முன்பு ஆஜரானார்கள். அப்போது வழக்கை வருகிற 20–ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின்னர் யுவராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.