தமிழகத்தில் மேலும் 13 மாவட்டங்களில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்; கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் மேலும் 13 மாவட்டங்களில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூட்டுறவு வாரவிழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2017-11-15 22:15 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் 64–வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா ஈரோடு மல்லிகை அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார்.

ஈரோடு செல்வகுமார சின்னையன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் பி.சி.ராமசாமி, கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.முருகன் திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கி பேசியதாவது:–

ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை 2–வது இடம் பிடித்து வரலாறு படைத்து வருகிறது. பயிர் கடன் தள்ளுபடியாக ரூ.5 ஆயிரத்து 400 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் தமிழகத்தை தவிர எந்தவொரு மாநிலத்திலும் வறட்சி நிவாரணம் வழங்கப்படுவது இல்லை.

உணவு உற்பத்தி பெருக்கத்துக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 8 மாவட்டங்களில் பயிர் காப்பீடு திட்டம் செயல்பட்டு வருகிறது. மேலும் 13 மாவட்டங்களில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. பால் உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் வகிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ –மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசும்போது, ‘பொதுமக்களிடையே உள்ள ஏற்ற தாழ்வுகளை சரிசெய்யும் கருவியாக கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது. குடிமராமத்து பணிகள் மூலம் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்’ என்றார்.

விழாவில் எலவமலை கூட்டுறவு கட்டிட சங்கத்துக்கு சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கான கேடயம் வழங்கப்பட்டது. இதை சங்கத்தின் தலைவர் எஸ்.மகேஸ்வரன் பெற்றுக்கொண்டார். இதேபோல் பல்வேறு சங்கங்களுக்கு சிறந்த சங்கங்களுக்கான கேடயம் வழங்கப்பட்டது. இதில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்துரவிச்சந்திரன், முன்னாள் மண்டல தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். முன்னதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் வரவேற்று பேசினார். முடிவில் கூட்டுறவு வார விழாக்குழு துணைத்தலைவர் தெய்வநாயகம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்