திண்டிவனம் அருகே முறைகேடாக அமைக்கப்பட்ட 500 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

திண்டிவனம் அருகே முறைகேடாக அமைக்கப்பட்ட 500 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

Update: 2017-11-15 21:45 GMT

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் வருவாய்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இணைந்து டெங்கு கொசு ஓழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

அந்த வகையில் திண்டிவனம் அருகே மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விட்டலாபுரம் ஊராட்சியில் கடந்த 13–ந்தேதி டெங்கு கொசு ஓழிப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மணிகண்டன், எண்டியூர் சுகாதார ஆய்வாளர் தினேஷ்ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் விட்டலாபுரம் கிராமத்திற்கு சென்றனர். அப்போது அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு பணியை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் வேறு வழியின்றி டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் திரும்பி சென்றனர்.

இது குறித்த தகவலை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் விட்டலாபுரம் ஊராட்சியில் தவறுகள் ஏதும் நடைபெறுகிறதா? என்று ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன்படி மரக்காணம் வட்டார வளர்ச்சி அதிகாரி தர்மலிங்கம் தலைமையிலான குழுவினர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று விட்டலாபுரம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிராமம் முழுவதும் பொது மக்கள் முறைகேடாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை பெற்று குடிநீர் எடுத்து வந்தது தெரிந்தது.

மேலும் பலர் வீடுகளில் மின்மோட்டார் அமைத்து குடிநீர் பெற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முறைகேடாக 500–க்கும் மேற்பட்ட வீடுகளில் பெற்றிருந்த குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். மேலும் 25–க்கும் மேற்பட்ட மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து முறைகேடாக குழாய்கள் பதித்து குடிநீர் எடுத்தவர்களுக்கு தலா ரூ.ஆயிரமும், மின்மோட்டார் பயன்படுத்தியவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீசு வழங்கினர். ஆனால் அதனை பொது மக்கள் வாங்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி தர்மலிங்கம் கூறியதாவது:–

விட்டலாபுரம் ஊராட்சியில் ஏராளமானவர்கள் கடந்த பல ஆண்டுகளாக முறைகேடாக குடிநீர் எடுத்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்டநபர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் மக்கள் பள்ளம் ஏற்படுத்தியும் குடிநீர் பிடித்துள்ளனர். அந்த பள்ளங்கள் சரி செய்யும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நாளையும்(அதாவது இன்றும்) நடைபெறும். பொது மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்கும் வகையில் தெருக்களில் 3 வீடுகளுக்கு ஒரு பொது குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள மற்ற ஊராட்சிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது அங்கும் யாரேனும் முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றிருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மரக்காணம் வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்