ஆள் பற்றாக்குறையால் பணிச்சுமை அதிகரிப்பு அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு நர்சுகள் போராட்டம்

ஆள்பற்றாக்குறையால் பணிச்சுமை அதிகரித்து இருப்பதாக கூறி கோவை அரசு ஆஸ்பத்திரியில் டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு நர்சுகள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-11-15 23:00 GMT

கோவை,

கோவை அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வரும் நர்சுகள் நேற்று காலை 8.45 மணிக்கு திடீரென்று டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது நோயாளிகள் இருக்கும் வார்டுகளை பார்வையிடுவதற்காக டீன் அசோகன் சென்றார். எனவே அவர் வரும் வரை சுமார் ஒரு மணி நேரம் நர்சுகள் அங்கேயே காத்து நின்றனர். பின்னர் அங்கு வந்த டீனை முற்றுகையிட்டு நர்சுகள் தங்களது குறைகளை தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:–

‘கோவை அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகளுக்கான 800 பணியிடங்கள் உள்ளன. ஆனால் 265 பேர் தான் பணிபுரிகிறோம். அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்கு ஏற்ப நர்சுகள் நியமிக்கப்படவில்லை. எனவே பணிச்சுமை அதிகம் உள்ளது. மேலும் மருத்துவ கழிவுகளை தரம் பிரித்து குப்பையில் போடுவது உள்ளிட்ட தொடர்புஇல்லாத வேலைகளை கூட நர்சுகளே செய்ய வேண்டும் என்று கூறி வற்புறுத்துகிறார்கள். இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி பாதிக்கப்படுகிறது.

2 அல்லது 3 வார்டுகளை கவனிக்கும் நர்சுகள், ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு செல்லும் போது வார்டில் பணியில் இல்லை என்று கூறி ‘மெமோ’ கொடுப்பதாக அச்சுறுத்துகிறார்கள். இதனால் மனஉளைச்சலுடன் பணியாற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம். இது போன்ற பிரச்சினைகளை தெரிவித்தும் டீன் கண்டுகொள்ளாமல் இருப்பதால் சிரமப்படுகிறோம். எனவே இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நர்சுகள் பற்றாக்குறை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற பிரச்சினைகளை தீர்க்க டாக்டர்களுடன் கலந்து பேசி உரிய வழிவகை செய்யப்படும் என்று டீன் அசோகன் உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து காலை 10.15 மணிக்கு நர்சுகள் பணிக்கு திரும்பினர். இவர்களது போராட்டம் காரணமாக 1½ மணிநேரம் பணிகள் பாதிக்கப்பட்டன. அனைத்து நர்சுகளும் வேலைக்கு திரும்பிய பின்னர் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றன.

மேலும் செய்திகள்