புதிய மோட்டார் வாகன சட்டத்தில் விலக்கு அளிக்கக்கோரி சேலத்தில் மெக்கானிக்குகள் ஊர்வலம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் விலக்கு அளிக்கக்கோரி சேலத்தில் மெக்கானிக்குகள் ஊர்வலம் நடத்தினர்.;

Update: 2017-11-15 23:00 GMT
சேலம்,

மத்திய அரசு கொண்டுவர இருக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்தில், இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் ஒர்க்‌ஷாப் தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தேசிய அளவில் தனி ஆணையம் அமைத்து அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இலவச இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி கொடுக்க வேண்டும். அனைத்து தேசிய வங்கிகளிலும் ஒர்க்‌ஷாப் தொழிலாளர்களுக்கு நிபந்தனைகளை தளர்த்தி தொழில் கடன் வழங்க வேண்டும்.

58 வயதுக்கு மேற்பட்ட மோட்டார் வாகன மெக்கானிக் அனைவருக்கும் மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட மோட்டார் பைக் மெக்கானிக்குகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

ஊர்வலம்

இதையொட்டி சேலம் கோட்டை மைதானத்தில் மோட்டார் பைக் மெக்கானிக்குகள் நேற்று காலை திரண்டனர். பின்னர் அங்கிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க மாவட்ட தலைவர் குமரவேல் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலத்தில் செயலாளர் பிரபாகர், துணை செயலாளர் பரமேஸ்வரன், துணை செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சுரேஷ்குமார், அமைப்பாளர் அன்வர் அலி உள்பட சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகரம், ஓமலூர், தீவட்டிப்பட்டி, தாரமங்கலம், இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மெக்கானிக்குகள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் சேலம் மாநகராட்சி அலுவலகம் வழியாக சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. 

மேலும் செய்திகள்