கூடலூரில் சீல் வைக்கப்பட்ட ரேஷன் கடையை திறந்து அதிகாரிகள் சோதனை
கூடலூரில் சீல் வைக்கப்பட்ட ரேஷன் கடையை திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் ராஜகோபாலபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் இருந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரியாக வழங்குவது இல்லை என பல்வேறு புகார்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்தன. அவரது உத்தரவின் பேரில் கடந்த 10–ந் தேதி மாவட்ட வழங்கல் அலுவலர் தனலிங்கம், கூடலூர் வட்ட வழங்கல் அலுவலர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட அதிகாரிகள் ரேஷன் கடையில் ஆய்வு செய்தனர்.
அப்போது ரேஷன் கடையில் முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரேஷன் கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இது குறித்து கடை விற்பனையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு வட்ட வழங்கல் துறையினர் விசாரணை அறிக்கை அனுப்பினர். இதை தொடர்ந்து கடையில் நடைபெற்ற முறைகேட்டின் அளவை கணக்கீட்டு சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளருக்கு ரூ.50 ஆயிரத்து 650 அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் உத்தரவின் பேரில் மகளிர் குழு கலைக்கப்பட்டு ரேஷன் கடையை வட்ட வழங்கல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே வட்ட வழங்கல் அலுவலர் அப்துல் ரகுமான் நாடுகாணியில் உள்ள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்–இன்ஸ்பெக்டர் சண்முகபாண்டி ஆகியோர் ரேஷன் கடை விற்பனையாளர் எல்சி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முறைகேடு புகார் எதிரொலியால் பூட்டி சீல் வைக்கப்பட்ட ரேஷன் கடையை வட்ட வழங்கல் அலுவலர் அப்துல் ரகுமான், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சண்முக பாண்டி ஆகியோர் திறந்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட கடையின் கட்டுப்பாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் சிரமம் இன்றி அத்தியாவசிய பொருட்கள் வாங்க அக்ரஹார தெருவுக்கு எதிரே உள்ள ரேஷன் கடைகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இது குறித்து வட்ட வழங்கல் துறை அலுவலர் அப்துல் ரகுமான் கூறும்போது, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மகளிர் ரேஷன் கடையில் நடைபெற்ற முறைகேடு குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் எல்சி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.