ஜவுளிக்கடையில் ஆடைகள் வாங்குவது போல் நடித்து ரூ.19 ஆயிரம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

மார்த்தாண்டம் அருகே ஜவுளிக்கடையில், ஆடைகள் வாங்குவது போல் நடித்து ரூ.19 ஆயிரம், செல்போன் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2017-11-15 22:15 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ஜாண் ராபின்சன் (வயது 35). இவர் நட்டாலம் சந்திப்பில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு 2 வாலிபர்கள் டிப்–டாப் உடையில் வந்தனர். அவர்கள் கடைக்குள் சென்று ஜாண் ராபின்சனிடம் வித விதமான துணிகள் தேவைப்படுவதாக கூறினர். ஜாண் ராபின்சனும் அவர்களுக்கு கடையில் இருந்த துணி வகைகளை காட்டினார்.

அப்போது, வாலிபர்கள் இருவரும் இன்னும் புதிய வகை ஆடைகள் இருந்தால் எடுத்து வாருங்கள் என்றனர். உடனே, ராபின்சன் கடையின் பின்பகுதியில் இருந்த துணிகளை எடுத்து வருவதாக கூறி உள்ளே சென்றார்.

பணம், செல்போன் திருட்டு

அவர் திரும்பி வந்து பார்த்த போது, வாலிபர்கள் மாயமாகி இருந்தனர். மேலும், கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.19  ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த ஜாண் ராபின்சன் அந்த வாலிபர்கள் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 இதுபற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜவுளிக்கடையில் துணி வாங்குவது போல் நடித்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்