நாமக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி 200 பேர் பங்கேற்பு

நாமக்கல்லில் நேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடந்தது. இதில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

Update: 2017-11-15 22:45 GMT
நாமக்கல்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டி நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த போட்டியினை சப்-கலெக்டர் கிராந்தி குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 200 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீட்டரும், மாணவிகளுக்கு 10 கி.மீட்டரும் பந்தய தூரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீட்டரும், மாணவிகளுக்கு 15 கி.மீட்டரும் பந்தய தூரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

முதல் பரிசு

13 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் எர்ணாபுரம் அரசு பள்ளி மாணவன் திருநாவுக்கரசு, பெண்கள் பிரிவில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இதேபோல் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் எர்ணாபுரம் அரசு பள்ளி மாணவன் தீபக் குமார், பெண்கள் பிரிவில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தேவபிரியா ஆகியோரும், 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலைப்பட்டி செல்வம் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெகதீஷ்வர்மா, பெண்கள் பிரிவில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தீபா ஆகியோரும் முதல் பரிசை தட்டிச்சென்றனர்.

போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர். 

மேலும் செய்திகள்