கவர்னரை வரவேற்பது என்பது மரபு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேட்டி

கவர்னரை வரவேற்பது என்பது மரபு என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2017-11-15 22:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் அருகே தொரவலூரில் நேற்று நடந்த மரக்கன்று நடும் விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மரக்கன்று நட்டார். விழாவில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

தமிழக கவர்னர் இந்த விழாவில் பங்கேற்று மரக்கன்று நட்டு தொடங்கிவைத்தார். இந்த விழாவில் பங்கேற்று, கவர்னரை வரவேற்க வேண்டும் என்று தமிழக முதல்–அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். அவருடைய உத்தரவை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இதற்காக தமிழக முதல்–அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கவர்னர் என்னிடம் கூறினார். முதல்–அமைச்சரின் உத்தரவின் பேரில் அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது என்று சொன்னபோது கவர்னர் மகிழ்ச்சி அடைந்தார். குடிமராமத்து பணிகளை செய்து, மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நமது மாவட்டத்துக்கு கவர்னர் வந்துள்ளார். அவரை வரவேற்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். கவர்னரை வரவேற்பது என்பது மரபு. கவர்னரை வரவேற்பதற்காக மாவட்ட கலெக்டர், மாவட்டத்தின் அமைச்சர் என்ற முறையில் நான், இந்த தொகுதி எம்.எல்.ஏ. ஆகியோரை இந்த விழாவில் பங்கேற்க முதல்–அமைச்சர் அனுப்பிவைத்துள்ளார். அனைத்து துறை அதிகாரிகளும் கவர்னரை வரவேற்க இங்கு வந்துள்ளனர். இது காலம் காலமாக நடக்கும் நடைமுறைதான். இதில் வேறொன்றும் இல்லை. எதிர்க்கட்சிகள் எதுவேண்டும் என்றாலும் சொல்வார்கள். எங்களை பொறுத்தவரை இந்த அரசு மக்கள் நலன் காக்கும் அரசு. மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறினார். அந்தவகையில் தமிழக முதல்–அமைச்சர், அந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு ரூ.250 கோடியை ஒதுக்கினார். அதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

1.5 டி.எம்.சி. தண்ணீரை பவானி ஆற்றில் இருந்து எடுத்து நீரேற்றம் செய்து குழாய் மூலமாக 33 பொதுப்பணித்துறை கண்மாய்கள், 42 ஊராட்சி ஒன்றிய கண்மாய்கள், 977 குளங்களை நிரப்புவதால் திருப்பூர், ஈரோடு, கோவை பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை எவ்வளவு விரைவாக செய்து முடிக்க முடியுமோ அந்த வகையில் நிதியை ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது. முதல்கட்ட பணிகள் முடிந்ததும், முதல்–அமைச்சரிடம் எடுத்துச்சொல்லி அடுத்த கட்டப்பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்