அனுமதியின்றி மணல் அள்ளிய வழக்கு: தலைமறைவாக இருந்த டிரைவர் விபத்தில் பலி உறவினர்கள் புகார்
அனுமதியின்றி மணல் அள்ளிய வழக்கில், தலைமறைவாக இருந்த டிரைவர் விபத்தில் சிக்கி பலியானார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வைகையாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 11–ந் தேதி நிலக்கோட்டை தாசில்தார் நிர்மலா கிரேசி தலைமையில் வருவாய்த்துறையினர் வைகையாற்று படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்ட நிர்வாகியான மீனா (வயது 39) மற்றும் டிராக்டர் டிரைவர் முத்துப்பாண்டி (30) ஆகியோர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அதிகாரிகளை பார்த்ததும் முத்துப்பாண்டி தப்பியோடி விட்டார். மீனா மட்டும் மாட்டிக் கொண்டார்.
அப்போது மீனா, அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கணேசகுமார் நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாவை கைது செய்தனர். இதற்கிடையில் தலைமறைவான முத்துப்பாண்டியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் அவர் அணைப்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த முத்துப்பாண்டி மொபட்டில் தப்பிச்செல்ல முயன்றார். அவரை பின்தொடர்ந்து போலீஸ் வாகனத்தில் விரட்டியதாக கூறப்படுகிறது. நடக்கோட்டை பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக முத்துப்பாண்டி மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விருவீடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையில் முத்துப்பாண்டியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், முத்துப்பாண்டி விபத்தில் இறந்திருக்க வாய்ப்பில்லை. போலீசார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முத்துப்பாண்டி மீது, போலீஸ் வாகனத்தால் மோதியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.