வறட்சி நிவாரணம் வழங்கியதில் முறைகேடு: கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

வறட்சி நிவாரணம் வழங்கியதில் முறைகேடு செய்த சம்பவத்தில் கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து ஆர்.டி.ஓ. அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2017-11-15 22:30 GMT

நிலக்கோட்டை,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சேவுகம்பட்டி கிராமத்தில் பாண்டீஸ்வரன் என்பவரும், எத்திலோடு கிராமத்தில் விஜயராஜன் என்பவரும் கிராம உதவியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். அப்போது, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரண தொகையை தங்களுடைய வங்கி கணக்கில் செலுத்தினர். இதற்கிடையே, 2 பேரும் வேறு கிராமங்களுக்கு பணிமாறுதலில் சென்றனர்.

இந்த நிலையில், வறட்சி நிவாரணம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பது அதிகாரிகள் மேற்கொண்ட தணிக்கையில் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும், பாண்டீஸ்வரனும், விஜயராஜனும் பணத்தை கையாடல் செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். லட்சகணக்கிலான ரூபாயை அவர்கள் முறைகேடு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன்தொடர்ச்சியாக அவர்கள் 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த முறைகேட்டில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனால், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ஜான்சன் விசாரணை மேற்கொண்டார். இதில், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த ஜெயராஜ் என்ற தற்காலிக ஊழியருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக, எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது? என்பது பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக பண பரிவர்த்தனை விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே, இந்த கையாடல் சம்பவத்தை தடுக்காமல் கவனக்குறைவாக இருந்ததாக மல்லணம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முருகனை பணியிடைநீக்கம் செய்து ஆர்.டி.ஓ. ஜான்சன் உத்தரவு பிறப்பித்து உள்ளார். சம்பவம் நடந்தபோது, அவர் சேவுகம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் இன்னும் சில வருவாய்த்துறை அலுவலர்கள் சிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்