டெங்கு கொசுப்புழுக்கள் அழிக்கும் பணி: கலெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் குடிநீர், மின்இணைப்பை துண்டிக்க உத்தரவு
தேவதானப்பட்டி அருகே, வீட்டில் தண்ணீர் தொட்டியில் உற்பத்தியாகி இருந்த டெங்கு கொசுப்புழுக்களை அழிக்கும் பணியை மேற்கொள்ள வந்த கலெக்டருடன், பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தேவதானப்பட்டி,
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள கெங்குவார்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி ரூ.6 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் பெரியகுளம் ஆர்.டி.ஓ. கிருஷ்ணம்மாள், தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஜி.கல்லுப்பட்டியை அடுத்த புனித சூசையப்பர் கிராமத்தில் வீடுகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் கலெக்டர் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது வீரணன் என்பவருடைய வீட்டில் தண்ணீர் தொட்டியில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்ததை கண்டுபிடித்தனர். அதில் ‘அபேட்’ மருந்தை ஊற்ற அதிகாரிகள் முயன்றனர். உடனே அவர்களை வீரணனின் மனைவி பாப்பாத்தி தடுத்தார்.
பின்னர் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த கலெக்டருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், அவருடைய வீட்டின் மின்இணைப்பு, குடிநீர் இணைப்பை துண்டிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.