ஆதம்பாக்கத்தில் பெண் என்ஜினீயர் எரித்துக்கொலையில் கடுமையான சட்டப்பிரிவில் வழக்கு

பெண் என்ஜினீயரை எரித்துக்கொன்றவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு வற்புறுத்தினார்கள்.

Update: 2017-11-16 00:00 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர் 7–வது தெருவில் வசிப்பவர் சண்முகம். இவர் கனடாவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். இதனால் வீட்டில் அவரது மனைவி ரேணுகா (45), மகள்கள் இந்துஜா (22), நிவேதா (20) மற்றும் பிளஸ்–1 படிக்கும் 16 வயது மகன் ஆகியோர் வசித்துவந்தனர்.

பி.டெக். பட்டதாரியான இந்துஜாவுக்கு பள்ளியில் படிக்கும்போதே வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ் (22) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். இந்துஜாவிற்கு சொந்தத்தில் மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்த ஆகாஷ் தன்னை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என கூறியதை இந்துஜா மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் இந்துஜா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தில் ரேணுகா, நிவேதா, பக்கத்து வீட்டுக்காரர் ராம்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரேணுகா, நிவேதா ஆகியோரிடம் ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட்டு ரகசிய வாக்குமூலம் பெற்றார். இந்த வாக்குமூலம் ஆலந்தூர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த சண்முகம் கனடாவில் இருந்து நேற்று சென்னை திரும்பினார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்த மனைவி மற்றும் மகளை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தார்.

இதற்கிடையில் இந்துஜாவின் உறவினர்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, ஒரே சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து உள்ளீர்கள். கொடூரமாக செயல்பட்ட ஆகாஷ் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். குரோம்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இந்துஜா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்துஜாவின் உடல் ஆதம்பாக்கம் சரஸ்வதி நகரில் சிறிது நேரம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்னர் இந்துஜாவின் உடல் ஆலந்தூர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இந்துஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது தந்தைக்கு ஆறுதல் கூறினார்.

திருமாவளவன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இந்துஜாவுக்கு நடந்த சம்பவம் வேதனையான ஒன்று. பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க மத்திய–மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வழக்குகளில் குற்றவாளிகள் அரசியல் துணையுடன் வெளியே வராமல் இருக்க போலீசார் கடுமையான பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்