தமிழக கவர்னரின் ஆய்வு குறித்து முதல்–மந்திரி நாராயணசாமி கருத்து
தமிழக கவர்னர் கோவையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியது பற்றி குறிப்பிட்ட முதல்–மந்திரி நாராயணசாமி, புதுச்சேரி வியாதி தமிழகத்திலும் பரவி உள்ளது என்று தெரிவித்தார்.
ஆலந்தூர்,
புதுச்சேரி முதல்–மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரி மாநில அரசின் அன்றாட செயல்பாடுகளில் கிரண்பெடி தலையிடுவது, தன்னிச்சையாக உத்தரவிடுவது, பல பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு உத்தரவிடுவது, அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடுவது, தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது என செயல்படுகிறார்.
இது சம்பந்தமாக நான், இது உங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல. கவர்னர், துணை நிலை கவர்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனையின்படி தான் நடக்க வேண்டும் என பலமுறை அவருக்கு கடிதம் எழுதி இருந்தேன். ஆனாலும் தொடர்ந்து நடந்து வருவதால் மேல் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தமிழகத்திலும் அந்த வியாதி பரவியிருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் தருவது தான் கவர்னரின் பணி. கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அமைச்சரவைக்கு தெரிவித்து மறுபரிசீலனை செய்ய சொல்லவேண்டும். யூனியன் பிரதேசத்தை விட மாநிலத்தில் உள்ள அரசுக்கு அதிக அதிகாரம் உண்டு.
கருத்து வேறுபாட்டின் முடிவில் அமைச்சரவை மீண்டும் உறுதி செய்து அனுப்பினால் அதை எந்தவித நிபந்தனையும் இன்றி கவர்னர் ஏற்கவேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்டு தன்னிச்சையாக உத்தரவு போடுவது கவர்னரின் வேலையில்லை. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வேலை.
மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசும், பிரதமரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்க கவர்னர், துணை நிலை கவர்னர்களை வைத்து எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் செயல்படுகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும்.
கவர்னர் பல பகுதிகளுக்கு சென்று பார்ப்பதில் தவறு கிடையாது. ஆனால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுத்து உத்தரவுகளை போடமுடியாது. அமைச்சர்களின் அனுமதியில்லாமல் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டமும் நடத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.