பரமக்குடியில் பயிர் காப்பீடு செய்ய காத்துக்கிடக்கும் விவசாயிகள்

பரமக்குடியில் வங்கிகளில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டி உள்ளதால் அவதிப்பட்டு வருகின்றனர்.;

Update: 2017-11-15 22:30 GMT

பரமக்குடி,

ஆண்டுதோறும் மழை பெய்யாமல் விவசாயம் பொய்த்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி இந்த ஆண்டும் பயிர் காப்பீடு செய்ய தமிழக அரசு கால அவகாசம் வழங்கி உள்ளது. கடந்த ஆண்டு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே பயிர் காப்பீடு செய்ய பிரீமியம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

இதன் காரணமாக ஏராளமானோர் பயிர் காப்பீடு செய்ய சம்பந்தப்பட்ட வங்கிகளில் புதிதாக கணக்கு தொடங்குவதற்காக குவிந்து வருகின்றனர். இதனால் கூட்டம் அலைமோதுகிறது. நகைக்கடன், அடகு நகைகளை திருப்புதல், சேமிப்பு கணக்கு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில் பயிர் காப்பீடு செய்யவும், புதிய கணக்கு தொடங்கவும் விவசாயிகள் வந்து குவிவதால் போதிய இடவசதி இல்லாமல் வங்கிகள் திணறி வருகின்றன. இதனால் பரமக்குடி வங்கிகளில் பயிர் காப்பீடு செய்ய வரும் விவசாயிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கும் அவல நிலை உள்ளது. அரசின் இந்த புதிய அறிவிப்பால் விவசாயிகள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனை பயன்படுத்தி ஒரு சில இடங்களில் இடைத்தரகர்கள் வங்கி அதிகாரிகளின் துணையோடு விவசாயிகளிடம் பணத்தை பெற்று பயிர் காப்பீடு செய்து கொடுக்கின்றனர். எனவே விவசாயிகளின் இந்த அவதியை போக்க மாவட்ட நிர்வாகம் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்