பூந்தமல்லியில் 10 கடைகளுக்கு ‘சீல்’ நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பூந்தமல்லி நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் ரூ.8 லட்சம் வரை பாக்கி வைத்து இருந்த 10 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.

Update: 2017-11-15 21:45 GMT

பூந்தமல்லி,

பூந்தமல்லி பஸ் நிலையத்தில், நகராட்சிக்கு சொந்தமான 37 கடைகள் உள்ளன. இந்த கடைகள் ஏலம் விடப்பட்டு உள்ளது. கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கடைக்கு ஏற்றார்போல் மாதம் ரூ.1,500 முதல் ரூ.3 ஆயிரம் வரை வாடகை செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. அதில் சுமார் 10 கடைகள் நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் ரூ.8 லட்சம் வரை பாக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என்று அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் இதுவரையிலும் வாடகை பாக்கியை அவர்கள் செலுத்தவில்லை.

இதையடுத்து நேற்று பூந்தமல்லி நகராட்சி கமி‌ஷனர் சித்ரா உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் அந்த கடைகளுக்கு ‘சீல்’ வைக்க சென்றனர். இதற்கு கடையின் உரிமையாளர்கள் சிலர், எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நகராட்சி ஊழியர்கள், வாடகை பாக்கி செலுத்தாத 10 கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர். ‘‘அந்த கடைகளின் உரிமையாளர்கள் உடனடியாக வாடகை தொகையை செலுத்தினால் கடைகளுக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றப்படும். தொகை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் கடை வேறு ஒருவருக்கு ஏலம் விடப்படும்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்