கோவில்பட்டியில், வணிகர்கள் ஒத்துழைப்புடன் வண்ணார் ஊரணி ஓடையை தூர்வாரும் பணி தொடக்கம்

கோவில்பட்டியில், வணிகர்கள் ஒத்துழைப்புடன் வண்ணார் ஊருணி ஓடையை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.

Update: 2017-11-15 21:00 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டியில், வணிகர்கள் ஒத்துழைப்புடன் வண்ணார் ஊருணி ஓடையை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் அச்சையா ஆலோசனையின்பேரில், கோவில்பட்டி ஊரணி தெருவில் உள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த 7–ந்தேதி தொடங்கியது. கோவில்பட்டி ஊரணி தெருவில் இருந்து மெயின் ரோடு சந்திப்பு வரையிலும் சாலையின் கிழக்கு பக்கம் உள்ள ஓடை ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த உரக்கடை, பாத்திரக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளையும், கட்டிடங்களையும் அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் ஊரணி தெரு ஓடையானது 30 அடி அகலத்தில் காட்சி அளிக்கிறது.

வணிகர்கள் ஒத்துழைப்புடன்...

தொடர்ந்து கோவில்பட்டி வண்ணார் ஊருணியில் இருந்து மூப்பன்பட்டி கண்மாய்க்கு செல்லும் வண்ணார் ஊருணி ஓடையை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிகர்களின் ஒத்துழைப்புடன் தூர்வாரும் பணி நேற்று காலையில் தொடங்கியது. பேரமைப்பு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். கோவில்பட்டி மெயின் ரோடு மார்க்கெட் ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள ஓட்டலின் அடியில் செல்லும் ஓடையில் துப்புரவு பணியாளர்கள் இறங்கி குப்பைகள், மண் அடைப்புகளை வெளியே எடுத்து, டிராக்டர் மூலம் அகற்றினர்.

பொக்லைன் எந்திரம் மூலம்...

பின்னர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கோவில்பட்டி வண்ணார் ஊருணி ஓடையானது கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடு வடக்கு பக்கத்தில் இருந்து முத்தானந்தபுரம் தெரு, மாதாங்கோவில் கிருஷ்ணன் கோவில் தெரு சந்திப்பு வழியாக, மெயின் ரோட்டின் மேற்கு பக்கமாக சத்யபாமா தியேட்டர் சந்திப்பு வரையிலும் சென்று, மார்க்கெட்டுக்கு கீழ்புறம், ரெயில்வே தண்டவாளம் அருகில் வழியாக மூப்பன்பட்டி கண்மாய்க்கு செல்கிறது.

வண்ணார் ஊருணி ஓடை முழுவதையும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிகர்களின் ஒத்துழைப்புடன் தூர்வாரப்படும். இன்று (வியாழக்கிழமை) பொக்லைன் எந்திரம் மூலம் ஓடையை தூர்வாரும் பணி நடைபெறும் என்று தெரிவித்தார். பேரமைப்பு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்