கீழப்பாவூரில் இருந்து நெல்லைக்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ் பிரபாகரன் எம்.பி தொடங்கி வைத்தார்

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் பகுதியில் இருந்து நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள பல கல்லூரிகளில் ஏராளமான மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர்.

Update: 2017-11-15 21:00 GMT

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் பகுதியில் இருந்து நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள பல கல்லூரிகளில் ஏராளமான மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் அலுவலகங்களுக்கு தினமும் நிறையபேர் சென்று வருகின்றனர். இங்கிருந்து நெல்லைக்கு நேரடி பஸ்வசதி கிடையாது, இவர்கள் தினமும் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாவூர்சத்திரம் வந்து தான் நெல்லைக்கு பஸ்சில் செல்லும் நிலை உள்ளது. கீழப்பாவூரில் இருந்து நெல்லைக்கு நேரடி பஸ்வசதி செய்து தர வேண்டுமென கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.யிடம் அப்பகுதி மாணவ– மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து எம்.பி.யின் முயற்சியின் பேரில் கீழப்பாவூரில் இருந்து நெல்லைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்குவதற்காக நெல்லையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டு தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து இந்த பஸ் கீழப்பாவூரில் இருந்து அதன் வழித்தடத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அரசு போக்குவரத்துகழக வணிக மேலாளர் சுப்பிரமணியன், தென்காசி கிளை மேலாளர் கோபாலகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் கந்தசாமிபாண்டியன், கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே.ஆர்.பால்துரை, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் சேர்மப்பாண்டி, அட்டா சேர்மன் வி.கே.கணபதி, கட்சி நிர்வாகி மதியழகன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்