கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஜோலார்பேட்டை அருகே மலையம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-11-14 22:15 GMT
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை அருகே சின்னகவுண்டனூர் காந்திநகர் பகுதியில் மலையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

நகை, பணம் திருட்டு

அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து வந்து கோவிலில் விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலுக்கு புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்று உள்ளனர்.

மேலும் உடைக்கப்பட்ட உண்டியலை கோவிலில் இருந்து வெளியே வீசி சென்று உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில் 2 பவுன் நகையும், உண்டியலில் இருந்த சுமார் ரூ.15 ஆயிரமும் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்