திருவாரூர் அருகே கோதுமை ஏற்றி சென்ற லாரி, பள்ளத்தில் கவிழ்ந்தது

திருவாரூர் அருகே கோதுமை ஏற்றி வந்த லாரி, பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2017-11-14 23:00 GMT
திருவாரூர்,

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை 20 டன் கோதுமை ஏற்றி கொண்டு லாரி திண்டுக்கலை நோக்கி சென்றது. இந்த லாரியை கரூர் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் மகன் ரத்தினாசலம் (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த மாற்று டிரைவர் ராஜேஷ் (42) என்பவரும் சென்றுள்ளார். இந்த லாரி திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனை அடுத்த கீழமுகுந்தனூர் என்ற இடததில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற அரசு பஸ்சுக்கு வழிவிட முயன்றபோது எதிர்பாராதவிதமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கோதுமை தரையில் கொட்டியது. இந்த விபத்தில் டிரைவர்கள் 2 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், தஞ்சை-நாகை சாலை இருவழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ள சாலையில் அதி வேகமாக வாகனங்கள் செல்கின்றன. இதில் குறுகிய சாலையில் எதிரே வாகனத்திற்கு வழி விடமுடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றது. கடந்த மாதம் இதே இடத்தில் கோதுமை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்