தஞ்சை கிளைச்சிறையில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓட்டம் போலீசார் வலைவீச்சு

தஞ்சை கிளைச்சிறையில் இருந்து நேற்று காலை விசாரணை கைதி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-11-14 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் ரகு (வயது 19). கார் டிரைவர். கடந்த மாதம் இவர் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச்சட்டத்தின் கீழ் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து ரகு கைது செய்யப்பட்டு தஞ்சை கிளைச்சிறையில் (பார்ஸ்டல் பள்ளி) விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார். இந்த கிளைச்சிறையில் 30 பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர்.

தப்பி ஓட்டம்

நேற்று காலை வழக்கம் போல கைதிகள் அனைவரும் உணவு சாப்பிடுவதற்காக அறையை விட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கிருந்த போலீசாரின் கண்ணில் படாமல் ரகு கிளைச்சிறையின் பின்பக்கமாக உள்ள தடுப்புச்சுவரை தாண்டி குதித்தார். பின்னர் அவர் புதுஆற்றை ஒட்டியுள்ள நடைமேம்பாலத்தின் வழியாக தப்பினார்.

இந்தநிலையில் ரகு சிறையில் இருந்து தப்பிவிட்டதை அறிந்த போலீசார் அவரை பிடிப்பதற்காக வெளியே ஓடிவந்தனர். அங்குள்ள புதர் மறைவில் அவர் பதுங்கியுள்ளாரா எனவும் போலீசார் தேடிப்பார்த் தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் ரகு தப்பி ஓடிவிட்டார். கிளைச்சிறையின் பின்பக்க தடுப்புச்சுவர் வழியாக அவ்வப்போது கைதிகள் தப்பிஓடுவது தொடர்கதையாக இருக்கிறது எனவும், இதற்கு தடுப்புச்சுவர் உயரம் குறைவாக இருப்பதும், அதனைஒட்டி மரங்கள் வளர்ந்திருப்பதே காரணம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், தப்பி ஓடியவரை இன்று (அதாவது நேற்று) இரவுக்குள் பிடித்துவிடுவோம் என்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் கிளைச்சிறைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், தப்பி ஓடிய ரகுவை போலீசார் தேடிவருகின்றனர். 

மேலும் செய்திகள்