கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி ஐம்பொன் சாமி சிலைகள் செய்வதற்காக பொருட்கள் சேகரிப்பு

சுத்தமல்லி சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, ஐம்பொன் சாமி சிலைகள் செய்வதற்காக பொருட்களை சேகரித்து வருகின்றனர்.

Update: 2017-11-14 22:45 GMT
தா.பழூர்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் சுத்தமல்லி கிராமத்தில் குந்தளாம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலானது சுமார் ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் காலத்தில் ஆட்சி புரிந்த சுந்தரசோழன் என்றழைக்கப்படும் இரண்டாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட சிவாலயமாகும். பழமை வாய்ந்த இக் கோவிலில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி, மார்கழி ஆருத்ரா தரிசனம், பெரிய கார்த்திகை தீபம், மாசி மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் சிறப்பாக நடந்து வந்தது. மேலும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களின் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. அதன்பிறகு கோவிலை கிராமமக்கள் சரிவர பராமரிக்காததால், கோவிலை சுற்றிலும் முட் புதர்கள் மண்டி, மதில் சுவர்கள் சிதிலமடைந்து கேட்பாரற்று கிடந்தது. இதனால் கோவிலில் எந்த ஒரு வழிபாடும் நடக்கவில்லை, கிராமமக்களும் கோவிலுக்கு செல்ல முடியாமல் இருந்தனர்.

ஐம்பொன் சிலைகள் திருட்டு

சோழர் கால கோவில் என்பதால், இக்கோவிலில் ஐம்பொன் சிலைகள் இருப்பதை நோட்டமிட்ட சிலை கடத்தும் கொள்ளையர்கள், கடந்த 2007-ம் ஆண்டு இங்குள்ள 15-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். அந்த சமயத்தில் தான் திரு புரந்தான் சிவன் கோவில், சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவில் சிலைகளும் திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலை திருட்டு கும்பலை அமெரிக்காவில் கைது செய்து அவர்களிடமிருந்து பல சிலைகளை மீட்டனர். இதில் சுத்தமல்லி சிவன் கோவிலுக்கு சொந்தமான 4 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட அந்த சிலைகள் தற்போது கும்பகோணம் சிலை பாதுகாப்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் சேகரிப்பு

இந்நிலையில் இக்கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்த கிராமமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கிடைக்கப்பெற்ற நிதியை கொண்டு, கோவில் விமானங்கள், கட்டிட மதில் சுவர்கள் புனரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் இக்கோவிலில் சுவாமி மற்றும் அம்பாள், விநாயகர், நவ கிரகமூர்த்திகள், நந்திதேவர் போன்ற கற்சிலைகளே உள்ளன. ஆனால் இக்கோவில் சிலைகள் பல திருட்டு போனதால் கும்பாபிஷேக விழாவை சிறப்பிக்க உற்சவ ஐம்பொன் சிலைகள் எதுவும் இல்லை. இது அப்பகுதி மக்களுக்கு வேதனையை தந்தது. இந்நிலையில் கோவில் திருப்பணிக்குழு கமிட்டியினர் ஐம்பொன் பொருட்களை சேகரித்து நடராஜர் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகளை ஐம்பொன்னால் செய்வதற்கு முடிவு செய்தனர். அதன்படி சுத்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களிடம் வீடு, வீடாக சென்று பித்தளை குடங்கள், குத்துவிளக்குகள், செம்பு குவளை, தங்கநகைகள் ஆகியவற்றை சேகரித்து வருகின்றனர். பின்னர் சேகரித்த பொருட்களை உருக்கி ஐம்பொன் சாமி சிலைகளை வடிவமைத்து கும்பாபிஷேகம் விழாவிற்குள் தயார் செய்து வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இக்கோவில் சிலைகள் திருட்டு போனபிறகும், மனம் தளராமல் கிராமமக்களே ஒன்றிணைந்து சிலை செய்வதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சிலைகளை மீட்க வேண்டும்

இதுகுறித்து கோவில் திருப்பணிக்குழு விழா கமிட்டி யினர் தெரிவிக்கையில், சிவன் கோவிலில் திருட்டு போன மீதமுள்ள சிலைகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள சோழர் கால கோவில்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். இக்கோவில் கும்பாபிஷேக விழாவை மிகவும் சிரமப்பட்டு செய்து வருகிறோம். கோவில் திருப்பணிக்கு போதிய நிதிவசதி இல்லாததால், பணிகள் சற்று தொய்வடைகிறது. எனவே இக்கோவிலுக்கு உதவ விரும்புபவர்கள் கோவில் திருப்பணி குழு கமிட்டியினரை அணுகி உதவி செய்யலாம் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்