தொடக்கக்கல்வியின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது மாநிலத்திட்ட இயக்குனர் தகவல்

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தொடக்கக்கல்வியின் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மாநிலத்திட்ட இயக்குனர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2017-11-14 22:45 GMT
தர்மபுரி,

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் தொடக்கக்கல்வியின் தரம் உயர்த்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தர்மபுரி பச்சமுத்து கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநிலத்திட்ட இயக்குனர் நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு தொடக்கக்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் ஆசிரியர்கள் கற்பித்தல் முறைகளை வலுப்படுத்த வேண்டும். உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் அதிக அளவில் பள்ளிகளை பார்வையிட்டு, கற்றல் முறைகள் குறித்தும,் மாணவர்களின் கற்றல் திறன்கள் குறித்தும் பதிவேட்டில் பதியவேண்டும். இந்த குறிப்புகளின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார்.

அதிகரிக்க நடவடிக்கை

இந்த கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 20 ஆயிரத்து 106 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 19 ஆயிரத்து 400 மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே தர்மபுரி மாவட்டத்தில் தான் 96.82 சதவிகிதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். இதேபோன்று தொடக்கக்கல்வி, நடுநிலைக்கல்வி ஆகிய கல்வியை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என பேசினாா.் கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இணை இயக்குனர் பொன்னைய்யா, முதன்மைக்கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பழனிசாமி, அனைவருக்கும் கல்வி இயக்க உதவித்திட்ட அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்