புதிய தமிழகம் கட்சியினர் போராட்டம் தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் குடிசைகள் அமைத்து குடியேறினர்

புதிய தமிழகம் கட்சியினர் திடீர் போராட்டம் தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் குடிசைகள் அமைத்து குடியேறினர்

Update: 2017-11-14 22:45 GMT
சேலம்,

சேலம் 5 ரோடு அருகே தனியார் மருத்துவமனை உள்ளது. நேற்று சேலம் மாவட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் சங்கர் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அங்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் கூடிய அவர்கள் அங்கு குடிசை அமைத்து அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், ‘’தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் அரசு புறம்போக்கு இடமான கோடிவாய்க்கால் ஓடையில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதாக நில அளவீட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அது புறம்போக்கு ஓடைநிலம் என்பதால் வீடில்லாத நாங்களும் இந்த புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து குடியிருக்கிறோம்‘’ என்றனர்.

தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய தமிழகம் கட்சியினர் வந்து குடிசை அமைத்து குடியேறிய தகவல் அறிந்து அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,” தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு ஆக்கிரமிப்பை அகற்றிட முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்‘’ என்றனர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் குடிசைகளை அகற்றி விட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்