மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதல் விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2017-11-14 22:45 GMT

வில்லியனூர்,

புதுவை மாநிலம் திருபுவனை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் தேவர். இவருடைய மகன் அமரன் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் பரத்குமார் (18). தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்.

நேற்று காலை அமரனும், பரத்குமாரும் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு புறப்பட்டனர். விழுப்புரம் – புதுச்சேரி நெடுஞ்சாலையில் வில்லியனூரை அடுத்த வடமங்கலம் அருகே வந்துகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற பஸ்சை அவர்கள் முந்திச்செல்ல முயன்றனர். அப்போது பின்னால் வந்த மினி லாரி அவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் பரத்குமார் மினி லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அமரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவரும் இறந்துவிட்டார்.

விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் வடமங்கலம் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்