மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.;
மடத்துக்குளம்,
திருப்பூர் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக அமராவதி அணை இருந்து வருகிறது. மேலும் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அணையில் இருந்து அமராவதி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
மேலும் கல்லாபுரம், கொழுமம், குமரலிங்கம், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர் உள்ளிட்ட ஏராளமான கரையோர கிராமங்களின் குடிநீர் தேவையையும் அமராவதி ஆறு நிறைவேற்றி வருகிறது. அத்துடன் கால்நடைகளின் தாகத்தையும் அமராவதி ஆறு தீர்த்து வருகிறது. பலரும் இந்த ஆற்றில் குளித்து வருவதால் பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டில் அமராவதி ஆறு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
அமராவதி அணையையொட்டி முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு சிறிய மற்றும் பெரியது என ஏராளமான முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த முதலை பண்ணையை பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். இந்த பண்ணையின் மேற்பரப்பில் வலைகள் இல்லாததால் இங்கு உள்ள முதலைக்குஞ்சுகளை பெரிய பறவைகள் தூக்கிச்சென்றுவிடுகின்றன. அப்படி எடுத்துச்செல்லும் போது தவறும் சில முதலைக்குஞ்சுகள் அமராவதி அணையில் விழுந்துவிடுகின்றன.
இந்தநிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் காலங்களில் முதலைக்குஞ்சுகள் அமராவதி ஆற்றுக்கு வந்து சேருகின்றன. இவ்வாறு வரும் முதலைக்குஞ்சுகள் ஆற்றின் கரையோர புதர்களில் ஒதுங்குகின்றன. அவைகள் காலப்போக்கில் நன்கு வளர்ந்து பெரிதாகிவிடுகின்றன. சில நேரங்களில் ஆற்றின் நடுவில் உள்ள பாறைகளின் மீது முதலைகள் வந்து படுத்திருப்பதை காணமுடிகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
பெரும்பாலான கிராம பகுதி மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து வரும் அமராவதி ஆற்றில் இறங்குவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதற்கிடையில் தற்போது மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் பாலத்தையொட்டிய பகுதியில் ஒரு முதலை காணப்படுகிறது. இது சில நேரங்களில் பாறைகளின் மீது வந்து ஓய்வெடுப்பதை பலரும் பார்த்துள்ளனர்.
ஆற்றில் தண்ணீரின் அளவு குறையும் காலங்களில் இந்த முதலை அருகில் உள்ள வயல்வெளியில் புகுந்து விடுகிறது. இந்த முதலையால் விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இங்கு ஒரு முதலைதான் உள்ளதா? அல்லது வேறு ஏதாவது முதலைகள் உள்ளதா? என்று தெரியவில்லை.
எனவே பெரிய அளவில் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக இந்த முதலைகளை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அமராவதி ஆற்றில் அவ்வப்போது காணப்படும் முதலைகளை பார்க்கும் பொதுமக்கள் அது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த முதலைகளை பிடிக்க வனத்துறையிடம் போதிய உபகரணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. சிறிய பரிசல்களில் ஆற்றில் சென்று கயிறுகளையும், குச்சிகளையும் பயன்படுத்தி முதலைகளை பிடிக்க வேண்டிய நிலையிலேயே வனத்துறையினர் உள்ளனர்.
இதன் காரணமாக வனத்துறையினரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. எனவே இத்தகைய முதலைகளை பிடிக்க வனத்துறையினருக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.