வேப்பூர் அருகே கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
வேப்பூர் அருகே கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
வேப்பூர்,
வேப்பூர் அருகே பாசார் கிராமம் உள்ளது. இங்கு வசிப்பவர்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாக செய்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையால் வேப்பூர் பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. எனவே அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து நெல், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் மின்வினியோகம் செய்யும் மின்மாற்றி கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென பழுதானது. இதனால் மின்மோட்டார்களை இயக்கி, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.
இது குறித்து விவசாயிகள், வேப்பூரில் உள்ள மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் மின்மாற்றியை சீரமைக்க கோரி மனுவும் கொடுத்தனர். இருப்பினும், மின்மாற்றி சரிசெய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு நேற்று கருப்பு கொடி ஏந்தி விளைநிலங்களுக்கு சென்றனர். அங்கு மின்மாற்றியை சீரமைத்து மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி கோஷமிட்டனர்.
போராட்டம் குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மின்மாற்றி பழுதானது. அதனை சீரமைக்கக்கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தண்ணீர் பாய்ச்ச முடியாததால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.
மேலும் வயல்களை செம்மைப்படுத்தி பயிர்கள் சாகுபடி செய்ய முடியவில்லை. உடனடியாக மின்மாற்றியை சீரமைத்து மின்சாரம் வினியோகம் செய்யாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர். இதையடுத்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.