முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த ஆயத்தப் பணிகள் தொடக்கம்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த ஆயத்தப் பணிகள் தொடங்கி விட்டதாக காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2017-11-14 22:45 GMT

தேனி,

முல்லைப்பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழு ஆய்வைத் தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அணையின் பராமரிப்பு பணிக்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்ன அனுமதி பெறவேண்டும்? என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கேரள அதிகாரிகள் தங்கள் தரப்பு ஆட்சேபனை, கருத்துக்களை தெரிவித்தனர். கூடிய விரைவில் இப்பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும்.

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக 2014–ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பு வந்ததில் இருந்து அணையை பலப்படுத்தும் பணிகளுக்கு அதிக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் தான் பேபி அணைக்கும், முல்லைப்பெரியாறு அணைக்கும் இடையில் உள்ள மண் திட்டு பகுதியில் பலப்படுத்தும் பணி நடத்தப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் ஒவ்வொரு பணிகளையும் தொடர் முயற்சி செய்து தான் தொடங்க வேண்டி உள்ளது. தீர்ப்புக்கு பிறகு நீர்மட்டம் 142 அடியை 2 முறை எட்டி உள்ளது. அடுத்து 152 அடியாக உயர்த்த ஆயத்த பணிகளை தொடங்கி விட்டோம். அதற்கு மின் இணைப்பு, சாலை வசதிக்கு கேரள அரசுக்கு விண்ணப்பித்து நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அணைக்கு தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல இனி இடையூறு இருக்காது. பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு 23 மரங்களை வெட்ட வேண்டும். அதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

பேபி அணையை பலப்படுத்திய பின்பு முல்லைப்பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஓரு குழு அமைக்கப்படும். அந்த குழு ஆய்வு செய்த பின்பு, நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்