பயிர்காப்பீட்டுக்காக விவசாயிகள் அலைக்கழிப்பு தி.மு.க. சார்பில் 27–ந்தேதி போராட்டம்
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அலைக்கழிப்பு செய்யப்படுவதை கண்டித்து தி.மு.க. சார்பில் வருகிற 27–ந்தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பரமக்குடி,
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு 15 நாள் அவகாசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதாக இல்லை. காப்பீடு செய்ய தேவையான ஆவணங்களை தயார் செய்து வங்கிகளில் கணக்கு தொடங்கி பதிவு செய்ய குறைந்தபட்சம் 1 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும். இதேபோல ஏற்கனவே அந்தந்த கிராமங்களில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் காப்பீடு பதிவு செய்தனர்.
அது அவர்களுக்கு ஏதுவாக இருந்தது. ஆனால் தற்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தான் காப்பீடு பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளை அலைக்கழிக்கும் செயலாகும். காரணம், அந்த வங்கிகளில் ஏராளமான விவசாயிகளுக்கு கணக்கு இருக்காது.
இனிமேல் புதிதாக கணக்கு தொடங்க வேண்டும். அவ்வாறு கணக்கு தொடங்க சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு செல்லும் விவசாயிகளை வீணாக அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே ஏற்கனவே இருந்தது போல் அந்தந்த கூட்டுறவு சங்கங்களிலேயே பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
கடந்த ஆண்டு பதிவு செய்த ஏராளமான கிராமங்களுக்கு இன்னும் பயிர் காப்பீடு வழங்காமல் உள்ளது. இந்த அவலநிலை ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் தான் உள்ளது. ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் இதுபற்றி கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
விவசாயிகளின் அவலநிலையை பற்றி கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து வருகிற 27–ந்தேதி திருவாடானை அருகே உள்ள அண்ணா திடலில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது என மாவட்ட செயலாளர் திவாகரன் கூறினார். இதில் விவசாயிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.