நெல்லையப்பர் சுவாமி–காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லையப்பர் சுவாமி–காந்திமதி அம்பாள் திருக்கல்யாண விழா நேற்று நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2017-11-14 20:45 GMT

நெல்லை,

நெல்லையப்பர் சுவாமி–காந்திமதி அம்பாள் திருக்கல்யாண விழா நேற்று நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

காட்சி கொடுத்த வைபவம்

நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்–காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கடந்த 3–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள் வீதி உலா சென்று வந்தனர். மேலும் கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் பக்தி இசை, சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தபசுக் காட்சி வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. டவுன் காட்சி மண்டபத்தில் கம்பைநதி காமாட்சி அம்மன் கோவிலில் தவம் இருந்த காந்திமதி அம்பாளுக்கு நெல்லையப்பர் சுவாமி காட்சி அளித்தார்.

திருக்கல்யாணம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 12–வது நாளான நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன. பின்னர் அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினர். அங்கு காலை 5.15 மணி அளவில் சுவாமி, அம்பாள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது. மேலும் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் பூப்பல்லக்கில் பட்டணப்பிரவேசம் வீதிஉலா சென்றனர். இதையொட்டி ஆறுமுகநயினார் சன்னதியில் காலை மற்றும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஊஞ்சல் விழா

இதை தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா தொடங்கியது. வருகிற 16–ந் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது. வருகிற 17–ந் தேதி(வெள்ளிக்கிழமை) இரவு சுவாமி, அம்பாள் ரி‌ஷப வாகனத்தில் மறுவீடு, பட்டணப்பிரவேசம், வீதிஉலா நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்