செங்கோட்டையில் ஆமை வேகத்தில் நடந்து வரும் பஸ்நிலையம்–பாலம் கட்டும் பணிகள் பொதுமக்கள் அவதி

செங்கோட்டையில் பஸ்நிலையம் மற்றும் பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2017-11-14 21:00 GMT

செங்கோட்டை,

செங்கோட்டையில் பஸ்நிலையம் மற்றும் பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அண்ணா பஸ்நிலையம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பஸ்நிலையம், கேரள மாநிலத்துடன் இருந்தபோது திறக்கப்பட்டது ஆகும். பின்னர் 1956–ம் ஆண்டு கேரளாவில் இருந்து பிரிந்து செங்கோட்டை தமிழ்நாட்டுடன் இணைந்து, நகரசபையால் பேரறிஞர் அண்ணா பஸ்நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டது. அன்று முதல் செங்கோட்டை பஸ்நிலையத்தை நகரசபை நிர்வாகம் பராமரித்து வருகிறது.

இந்த பஸ்நிலையம், கேரளா அருகில் இருப்பதால் இருமாநில பொதுமக்களும் தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்வார்கள். கேரள மாநிலம் திருவனந்தபுரம், குழத்துபுழா, கொல்லம், எர்ணாகுளம், கோட்டயம், புனலூர், பத்தினம்திட்டா, தென்மலை, ஆரியங்காவு, அச்சன்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து 25–க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் செங்கோட்டை வந்து செல்லும். அதுபோல் 10–க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள், கேரள மாநிலத்துக்கு சென்று வரும்.

முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது

செங்கோட்டையில் இருந்து நேரடியாக சென்னை, சேலம், திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, ராஜபாளையம், திருப்பதி, புதுச்சேரி, பெங்களூரு, கோழிக்கோடு, குருவாயூர் உள்பட பல ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் செங்கோட்டை வழியாக செல்வதுதான் விரைவான பாதையாகும். இருப்பினும் செங்கோட்டை பஸ்நிலையத்தில் போதிய இடவசதியும், பாதுகாப்பு வசதிகளும் இல்லை. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை. பஸ்கள் வந்து செல்லும் இருவாசல் பகுதிகளிலும் குண்டும் குழியுமாக இருந்து வந்தது. இதனால் டிரைவர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் பஸ்நிலையத்தை சீரமைக்க போவதாக நகரசபை நிர்வாகம் கடந்த மாதம் 5–ந் தேதியன்று முன்னறிவிப்பு இன்றி மூடிவிட்டது. இருவாசல்களிலும் கயிறு கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை பயணிகள் பஸ் ஏறுவதற்கு பஸ்நிலையத்துக்கு வெளியே ரோட்டின் இருபுறமும் வெயில், மழை என்று பாராமல் நின்றபடி சிரமப்படுகின்றனர்.

பாலமும் இடிப்பு

கடையநல்லூர், புளியரை, கேரளா செல்ல வேண்டிய பயணிகள், பஸ்நிலையத்தின் பின்புறமாக மாற்றுப்பாதை வழியாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் பஸ் ஏற வேண்டும். இரவில் அந்த பாதை வழியாக செல்வதற்கு பெண்கள் அச்சப்படுகின்றனர். பாதையில் மின்விளக்குகளும் இல்லை. பாதுகாப்பு வசதியும் இல்லை. அதிகாரிகளின் அவசர மற்றும் அலட்சிய போக்கினால் பொதுமக்களும், பயணிகளும் பெரும் அவதிக்கு ஆளாகிவிட்டனர்.

40 நாட்கள் கடந்தும் பஸ்நிலையத்தை சீரமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் தான் நடக்கிறது. நிலைமை இப்படி இருக்க, வாஞ்சிநாதன் சிலை அருகே கொல்லம் மெயின் ரோட்டில் புதிய பாலம் கட்டுவதற்காக அங்கிருந்த பழைய பாலத்தையும் கடந்த மாதம் 27–ந் தேதி அன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னறிவிப்பு இன்றி இடித்து விட்டனர். கடந்த சில நாட்களில் பெய்த மழையால், இடித்த பாலத்தின் குறுக்கே குளத்தில் இருந்து தண்ணீர் அதிகமாக வருவதால் பாலம் கட்டும் பணிகளும் நடக்கவில்லை.

பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை

சபரிமலை சீசன் முடிந்து பின்னர் முதலில் பஸ்நிலையம் சீரமைப்பு பணிகளை முடித்து, பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம். அதேபோன்று கேரளா செல்லும் இணைப்பு பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டும் பணிகளை தொடங்கி இருக்கலாம்.

ஆனால் அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இனிமேலாவது பொதுமக்களின் நலன் கருதி பஸ்நிலைய வேலைகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதுபோல் பாலம் கட்டும் பணிகளில் அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலப்பணிகளை விரைந்து முடிக்க அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை 

வருகிற 17–ந் தேதி கார்த்திகை மாதம் பிறக்கிறது. சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதம் மேற்கொள்ளும் அய்யப்ப பக்தர்கள், வாஞ்சிநாதன் சிலை அருகே கொல்லம் மெயின்ரோட்டில் உள்ள பாலத்தின் வழியாகத்தான் சபரிமலைக்கு செல்ல வேண்டும். தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்களில் செல்வார்கள். தற்போது இந்த பாலம் இடிக்கப்பட்டு விட்டதால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றித்தான் செல்ல வேண்டும். சபரிமலை சீசன் முடிந்த பிறகு பாலத்தை இடிக்க வேண்டும் என அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் பாலம் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மாற்றுப்பாதை நல்ல முறையில் இரவிலும் பயணிக்க கூடிய வகையில் அமைக்க வேண்டும் என்று அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்