‘பத்மாவதி’ படம் வெளியாக வாய்ப்பு தாருங்கள் நடிகர் ஷாகித் கபூர் வேண்டுகோள்

‘பத்மாவதி’ படம் வெளியாக வாய்ப்பு தாருங்கள் என்றும், படத்தை பற்றி முன்கூட்டியே கருத்து சொல்லாதீர்கள் என்றும் நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்துள்ளார்.

Update: 2017-11-13 22:10 GMT

மும்பை,

பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்திருக்கும் இந்திப்படம், ‘பத்மாவதி’. நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். டிசம்பர் 1–ந் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.

ராஜபுத்திரர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படத்தில், வரலாற்றை தவறாக சித்தரித்து இருப்பதாக ராஜபுத்திர சேவா அமைப்பினர் குற்றம்சாட்டினர். மேலும், இந்த படம் ‘ரிலீஸ்’ ஆவதை எதிர்த்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மும்பையில் உள்ள இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் ஷாகித் கபூர் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இதுபோன்ற போராட்டங்களை நீண்ட நாட்களாக நான் பார்க்கிறேன். முதலில் படத்தை பார்த்துவிட்டு, அதன்பின் முடிவு எடுங்கள். ‘பத்மாவதி’ படம் வெளியாக வாய்ப்பு தாருங்கள். முன்கூட்டியே கருத்து சொல்லாதீர்கள்.

ஒவ்வொருவரது உணர்வையும், நலனையும் காக்க நாங்கள் முயற்சிக்கிறோம். எங்களால் முடிந்தவரை இந்த படத்தை சிறப்பாக எடுக்க முயற்சித்தோம். இந்த படத்தை பற்றி பொதுமக்கள் என்ன நினைத்தாலும், அவர்களது எண்ணத்தை நாங்கள் மதிப்போம். இந்த படத்தை நினைத்து, ஒட்டுமொத்த படக்குழுவினரும் பெருமை அடைகிறோம்.

இவ்வாறு ஷாகித் கபூர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்