தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து எலக்ட்ரீசியன் தீக்குளிக்க முயற்சி

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்த எலக்ட்ரீசியனை போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

Update: 2017-11-13 23:00 GMT
தஞ்சாவூர்,

கடந்த மாதம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். இப்படியொரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் நாட்களில் கலெக்டர் அலுவலகங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமாக இருந்தாலும் சரி, மாதம்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமாக இருந்தாலும் சரி 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். பொதுமக்கள், விவசாயிகள் பைகள் கொண்டு வந்தால் அவற்றை சோதனை செய்த பின்னரே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இப்படி பல்வேறு சோதனைக்கு மத்தியில் பெட்ரோல் நிரப்பப்பட்ட 2 லிட்டர் கேனுடன் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் மணிகண்டன்(வயது28) கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

திடீரென அவர் தீக்குளிப்பதற்காக பெட்ரோலை தனது உடலில் ஊற்ற முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறியதாவது:-

நான் பட்டுக்கோட்டை நகராட்சியில் தற்காலிக பணியாளராக எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தேன். என் மீது திடீரென 4 மின்மோட்டார்களை திருடிவிட்டதாக நகராட்சி அலுவலர் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் பொய்யானது. என் மீது வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மானநஷ்டஈடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனம் உடைந்த நான் தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரை போலீசார், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் அழைத்து சென்றனர். அவரிடம் நடந்த விவரத்தை தெரிவித்த மணிகண்டன் கோரிக்கை மனுவையும் அளித்தார். இந்த மனு மீது பட்டுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக்திவேல் உத்தரவு பிறப்பித்தார். 

மேலும் செய்திகள்