சம்பளம் வழங்காததை கண்டித்து பல் மருத்துவ பேராசிரியர்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்

சம்பளம் வழங்காததை கண்டித்து பல் மருத்துவ பேராசிரியர்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-13 22:45 GMT

புதுச்சேரி,

புதுவை கோரிமேட்டில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக்கல்லூரி உள்ளது. இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவமனை மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.

இதுபோன்ற நிலை கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. இதனை கண்டித்தும் சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தியும் பல் மருத்துவக்கல்லூரியின் ஆசிரியர்கள் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் மதிய உணவு இடைவேளை நேரத்தில் அவர்கள் காந்தி சிலை அருகே கருப்பு சின்னம் (பேட்ஜ்) அணிந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்க தலைவர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்று நடந்ததில்லை என்றும், இனிவரும் காலங்களில் காலதாமதம் இன்றி முறையாக ஊதியம் வழங்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று சங்க தலைவர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்