பிங்கர்போஸ்ட் அண்ணா காலனியில் நடைபாதை அமைத்து தரக்கோரி கலெக்டரிடம் மனு

ஊட்டி பிங்கர்போஸ்ட் அண்ணா காலனியில் நடைபாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2017-11-13 22:30 GMT

ஊட்டி,

ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அப்போது ஊட்டி பிங்கர்போஸ்ட் அண்ணா நகர் காலனி பகுதி பொதுமக்கள் நடைபாதை அமைத்து தரக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:–

அண்ணா நகர் காலனி பகுதியில் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்கப்பட வில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைக்கு செல்ல நாங்கள் சிரமம் அடைந்து வருகிறோம்.

மேலும் அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. இதற்கு கழிவுநீர் தொட்டி கட்டி இணைப்பு கொடுக்காததால், அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதன் காரணமாக திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, நடைபாதை அமைத்து தருவதோடு, பொது கழிப்பிடத்துக்கு கழிவுநீர் தொடடி கட்டி இணைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கொடுத்த கூறப்பட்டு உள்ளதாவது:–

சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 50–க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் தர போதிய நிதி இல்லை. எனவே, மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாகவோ அல்லது மாற்று பணி மூலமாகவோ ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். பள்ளியில் மாணவர்களுக்கு கட்டிடம், ஆய்வுக்கூடம், ஆண்கள் கழிப்பறை கட்ட நிதி ஒதுக்க வேண்டும்.

மேலும் பள்ளி வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அதன் காரணமாக பள்ளி மாணவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, பள்ளி வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி அருகே தாவணெ கிராமத்தை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், தாவணெ கிராமத்தில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றப்படுவது இல்லை. பொதுமக்கள் எளிதில் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைத்து கொடுக்க வில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்