ஈரோட்டில் பட்டா உள்ள வீடுகளை காலி செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது, பொதுமக்கள் கோரிக்கை

ஈரோட்டில் பட்டா உள்ள வீடுகளை காலி செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2017-11-13 22:30 GMT

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

ஈரோடு பொய்யேரிக்கரை வீதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:–

கடந்த 70 ஆண்டுகளாக பொய்யேரிக்கரை வீதியில் வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. மேலும், அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்ட மாநகராட்சி மூலம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் நாங்கள் வங்கியில் கடன் பெற்று சொந்த வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள ஓடையில் இருந்து தண்ணீர் வருவதை தடுக்க தடுப்புச்சுவரும் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாங்கள் ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வருவதாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. அதில் வருகிற 23–ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. நாங்கள் எந்தவொரு ஆக்கிரமிப்பும் செய்யவில்லை. எனவே எங்களை பொய்யேரிக்கரையில் இருந்து காலி செய்யுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

இதேபோல் ஈரோடு பவானி ரோடு திருவள்ளுவர் நகரை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள மல்லிநகரில் குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. எங்களுக்கும் அதே பகுதியில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைக்கிராமத்தை சேர்ந்த முதியவர்கள் சிலர் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:–

நாங்கள் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தோம். அதன்படி எங்களுக்கு சுமார் ஒரு ஆண்டு வரை மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு உதவித்தொகை வரவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுகொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் செலவுக்கு பணம் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே எங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறிஇருந்தனர்.

பவானி லட்சுமிநகர் மசூதி வீதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூட சீருடையுடன் அழைத்து வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை வீட்டு வாடகைக்கு கொடுக்க வேண்டி உள்ளது. எங்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

பவானியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘‘பவானி அந்தியூர் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரம் உள்ள காலி இடத்தில் சிலர் கம்பி வேலி அமைத்து வருகிறார்கள். அங்கு உள்ள வீடு, கடைகளுக்கு முன்பு வரை கற்களை நட்டு வைத்து வேலி அமைக்கப்படுகிறது. இதனால் வீடு, கடைகளுக்கு மக்கள் சென்று வருவதற்கே முடியாத நிலை உள்ளது. எனவே கம்பி வேலி அமைக்க தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறி இருந்தனர்.

தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு தொழிலாளர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘‘பெருந்துறை தாலுகா வடமுகம் வெள்ளோடு பகுதியில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோருக்கு கடந்த 2000–ம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதன்பின்னர் 6 மாதங்களில் புதிய பட்டா தருவதாக பழைய பட்டாக்களை அதிகாரிகள் திரும்ப பெற்றனர். அதன்பின்னர் எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்’’, என்றனர்.

இதேபோல் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, கல்விக்கடன், குடிநீர் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 354 மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் எம்.பாபு, மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்