சாக்கடை கால்வாய் பிரச்சினை: இருதரப்பினர் மோதல்–கல்வீச்சு 8 பேர் கைது

சாக்கடை கால்வாய் பிரச்சினையால் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-11-13 22:45 GMT

பழனி,

பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சி 17–வது வார்டு பொன்னாபுரம் காளியம்மன் கோவில் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்த சாக்கடை கால்வாய் வழியாகவே வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில் சாக்கடை கால்வாயின் ஒரு பகுதியை அப்பகுதியை சேர்ந்த மூடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கழிவுநீர் நடைபாதையில் தேங்கி நின்றதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. பொதுமக்களும் பெரிதும் அவதியடைந்து வந்தனர். பின்னர் இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் மனு அளித்தனர். அதில் மூடப்பட்ட சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். அல்லது புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் சாக்கடை கால்வாயின் மற்றொரு பகுதியையும் மண்ணைப்போட்டு மூடினர். இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் அதே இடத்தில் தேங்கி நின்றது. அதில் கொசுப்புழுக்களும் அதிகம் உற்பத்தியாகின. இதைப்பார்த்த சிலர் நேற்று முன்தினம் இரவு சாக்கடை கால்வாயில் உள்ள மண்ணை அகற்றுவதற்காக சென்றனர்.

அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தகராறு மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர். இதில் அப்பகுதியை சேர்ந்த பிரசன்னகுமார் (வயது 20), சங்கர்ராம் (25) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை உடன் சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்தனர். அதன் பின்னர் மீண்டும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்படாமல் இருக்க 17–வது வார்டு பகுதியில் 40–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பின்னர் இருதரப்பினர் சார்பில் ஆயக்குடி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் 17–வது வார்டு பகுதியை சேர்ந்த 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் நாட்ராயன் (55), சிவசுப்பிரமணி (40), சபாபதி (52), பூபதி (34), சுரேஷ்(38), டேவிட்குமார் (23), அன்புராஜ் (25), இன்பராஜ் (25) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பொன்னாபுரம் தெற்குதெருவை சேர்ந்த ஒரு தரப்பினர், தங்கள் தரப்பை சேர்ந்த 4 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி பழனி சாலையில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் பார்த்தனர். உடனடியாக அவர்களை போராட்டத்தில் ஈடுபட விடாமல் தடுத்தனர். இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த பழனி தாசில்தார் ராஜேந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கைது செய்யப்பட்டவர்களை உரிய விசாரணைக்கு பின்னர் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் மூடப்பட்ட சாக்கடை கால்வாயை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் மூடப்பட்ட சாக்கடை கால்வாயை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

மேலும் செய்திகள்