நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 5 பேர் கைது

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-11-13 23:00 GMT

நாகர்கோவில்,

கந்துவட்டி கொடுமையின் காரணமாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அங்கு வந்து செல்லும் மக்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தின் பின்புற வாசல் உள்பட சில வாசல்கள் பூட்டி வைக்கப்பட்டு உள்ளன. அலுவலக விடுமுறை நாட்களில் கூட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், குமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஏழைகள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதற்கு கண்டனம் தெரிவித்தும், ஏழை மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நவம்பர் 13–ந் தேதி (நேற்று) கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு (ரெட்ஸ்டார்) கட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும் நாளான நேற்று காலையிலேயே கலெக்டர் அலுவலக வளாகப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி, இன்ஸ்பெக்டர் பென்சாம் உள்ளிட்டோர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பகுதியில் தீயணைப்பு நிலைய வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு, தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் இருந்தனர்.

கலெக்டர் அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள், மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு கொடுக்க வந்தவர்கள் அனைவரும் போலீசாரின் பலத்த சோதனைக்குப்பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் எடுத்து வந்த பை உள்ளிட்ட உடைமைகளும் சோதனையிடப்பட்டன. இதனால் கலெக்டர் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காட்சி அளித்தது.

பகல் 11.30 மணியளவில் “காவல் நிலையங்களில் உள்ள புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடு“ என்ற வாசகத்துடன் கூடிய பேனரை கையில் பிடித்தபடி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு (ரெட்ஸ்டார்) கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ் தலைமையில் சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்த கேப்டன் சிவா, சுசீந்திரத்தைச் சேர்ந்த ஆவுடைக்கண்ணன் (வயது 60), அவருடைய மனைவி கவிதா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரமா ஆகிய 5 பேர் கலெக்டர் அலுவலகம் நோக்கி தீக்குளிப்பு போராட்டம் நடத்த வந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஆவுடைக்கண்ணன் தான் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தனது தலை மற்றும் உடலில் ஊற்றினார். உடனே போலீசாரும், தீயணைப்பு படையினரும் சேர்ந்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி கலெக்டர் அலுவலகத்துக்குள் கொண்டு வந்தனர். மேலும் அவரிடமிருந்த மண்எண்ணெய் பாட்டிலும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர்மீது தண்ணீர் ஊற்றப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்காக தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

ஆவுடைக்கண்ணன் சுசீந்திரம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்காததை கண்டித்து மனைவியுடன் இந்த தீக்குளிப்பு போராட்டத்தில் பங்கேற்க வந்ததும், கேப்டன் சிவா தனது அலுவலக பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மற்றும் தன்னை தாக்கியதாக பா.ஜனதா பிரமுகர் ஆகியோர் மீது கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததாலும், ரமா தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

தீக்குளிப்பு போராட்டத்தை நடத்த முயன்ற பால்ராஜ், கேப்டன் சிவா, கவிதா, ரமா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்