சசிகலாவின் வக்கீல் வீடு உள்பட நாமக்கல்லில் 5 இடங்களில் வருமானவரி சோதனை நிறைவு

சசிகலாவின் வக்கீல் செந்தில் வீடு உள்பட நாமக்கல்லில் 5 இடங்களில் 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவடைந்து உள்ளது. அப்போது சூட்கேசுடன் அலுவலர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-11-12 23:15 GMT
நாமக்கல்,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் கடந்த 9-ந் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த வகையில் நாமக்கல் கூட்டுறவு காலனியில் உள்ள சசிகலாவின் வக்கீல் செந்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி, செந்திலின் ஜூனியர் வக்கீல் பாண்டியன், செந்திலுடன் இணைந்து தொழில் செய்து வரும் சுப்பிரமணியம் ஆகியோரின் வீடுகளிலும், செந்திலின் நண்பர் பிரகாஷின் அலுவலகத்திலும் கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வக்கீல் செந்தில் வீட்டில் கடந்த 9-ந் தேதி காலை 6.30 மணிக்கு சோதனையை தொடங்கிய வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் தங்களது சோதனையை நிறைவு செய்தனர். சோதனை முடிந்து வெளியே வந்தபோது வருமானவரித்துறை அலுவலர் ஒருவர் சூட்கேசுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் என்ன இருந்தது என்பது தெரியவில்லை.

பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏ.வி.பாலுசாமியின் வீட்டிற்கு ஒரு காரில் சென்றனர். அங்கு சோதனையை முடித்த அதிகாரிகளுக்கு சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக கூறி கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் 2 கார்களில் அவர்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்றனர்.

இதைத்தொடர்ந்து படிப்படியாக நேற்று அதிகாலை 4 மணி அளவில் 5 இடங்களிலும் வருமானவரி சோதனை முடிவுக்கு வந்தது. 3 நாட்களாக நீடித்து வந்த சோதனை நிறைவு பெற்றது.

இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்