வருமான வரி சோதனை நிறைவு: திவாகரனிடம் விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டதால் பரபரப்பு

மன்னார்குடியில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நேற்று நிறைவடைந்தது. திவாகரனிடம் விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு சொந்தமான கல்லூரியில் ஒரு அறைக்கு “சீல்” வைக்கப்பட்டது.

Update: 2017-11-12 23:15 GMT
மன்னார்குடி,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்களில் கடந்த 9-ந் தேதி வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 187 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையின்போது வரி ஏய்ப்பு, சட்ட விரோதமான முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு சொந்தமான மகளிர் கல்லூரி உள்ளிட்ட 14 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.

மன்னார்குடியில் கடந்த 10-ந் தேதி 13 இடங்களில் சோதனை முடிவடைந்து விட்டது. கல்லூரியில் மட்டும் நேற்று அதிகாலை வரை சோதனை நடந்தது. கடந்த 4 நாட்களாக இரவு, பகலாக கல்லூரியில் தொடர்ந்து நடந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட கார்களில் எடுத்து சென்றனர்.

சோதனையை முடித்துக் கொண்டு கல்லூரியில் இருந்து வெளியே வந்த வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர்கள் கூறியதாவது:- கைப்பற்றப்பட்ட ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ய இருக்கிறோம். ஆய்வின் முடிவுகள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க முடியாது. இவ்வாறு கூறினர்.

கல்லூரியில் சோதனை முடிவடைந்த பின்னர் அதிகாரிகள் திவாகரனை காரில் அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்றனர். முன்னதாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நேற்றுமுன்தினம் காலை 11 மணி அளவில் தொடங்கி நேற்று அதிகாலை 2 மணி அளவில் முடிவடைந்தது. விடிய, விடிய நடைபெற்ற இந்த விசாரணையால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையின்போது வருமானவரித்துறையினர் பல்வேறு ஆவணங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. கல்லூரியில் உள்ள ஒரு அறைக்கு வருமானத்துறையினர் “சீல்” வைத்துள்ளனர். அந்த அறையின் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. அங்கு முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையையொட்டி மன்னார்குடி-மதுக்கூர் சாலை, கீழதிருப்பாலக்குடி உள்ளிட்ட இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனை முடிந்த பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்ற கார்களுக்கு மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பாக சென்றனர்.

கல்லூரியில் சோதனை நடத்த வந்த அதிகாரிகள் மன்னார்குடியில் தங்காமல் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளனர். கடந்த 4 நாட்களாக அங்கிருந்து அதிகாரிகள் காரில் வந்து சோதனை மேற்கொண்டனர். 

மேலும் செய்திகள்