தினகரன் வீடு உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவின் உயிலை எடுக்க வருமான வரித்துறையினர் சோதனை
ஜெயலலிதாவின் உயிலை எடுக்க தினகரன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர் என முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி பேசினார்.
சேலம்,
சேலம் கிழக்கு மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் சீலநாயக்கன்பட்டி கிளை செயலாளர் ராஜீ தலைமை தாங்கினார். மாநகர கிழக்கு செயலாளர் ரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, வெங்கடபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– தினகரன் வீடு உள்ளிட்ட 150–க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனை ஜெயலலிதாவின் உயிலை எடுப்பதற்காக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சேகர்ரெட்டி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது பணம் எடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டும் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. ஆனால் டெல்டா பகுதிகளை அழிக்கும் வகையில் எரிவாயு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது.
ஜெயலலிதாவை விட அதிகமான பூரணகும்ப மரியாதைகளை எடப்பாடி பழனிசாமி பெற்று வருகிறார். அ.தி.மு.க.வை இயக்குவதில் காவல்துறைக்கு பங்கு உள்ளது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. அமலாக்கம், ஆதார் எண் இணைப்பு போன்ற நடவடிக்கையினால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
காய்கறிகள், மளிகை பொருட்கள், சமையல்கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. கந்து வட்டி கொடுமை, நீட் தேர்வு என பல்வேறு பாதிப்புகள் நீண்டு கொண்டே போகிறது.
சேலத்தில் அதிகமானோர் வெள்ளிக்கொலுசு தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த தொழிலாளர்களுக்கு வீடுகள் உள்ளதா? என கலெக்டர் ஆய்வு நடத்த வேண்டும். நகர்புறத்தில் ஏழைகள் வீடு இல்லாமல் இருக்கிறார்கள். அப்படியே வீடு இருந்தாலும் பட்டா இருப்பதில்லை. இந்த பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.