பொம்மையார்பாளையத்தில் கடல் அரிப்பால் 7 வீடுகள் இடிந்து விழுந்தன
வானூர் அருகே பொம்மையார்பாளையத்தில் கடல் அரிப்பால், கடற்கரையோரம் இருந்த 11 வீடுகள் இடிந்து விழுந்தன.
வானூர்,
இந்த நிலையில் கடந்த 2004–ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதல் பாதிப்பை தொடர்ந்து இந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்களுக்கு பொம்மையார்பாளையத்தில் நல்ல மேடான இடத்தில் அரசு சார்பில் சுனாமி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. மீனவர்கள் அங்கு குடியேறிவிட்டனர்.
ஏற்கனவே கடற்கரையோரம் அவர்கள் வசித்து வந்த பழைய வீடுகள் அங்கேயே கைவிடப்பட்ட நிலையில் இருந்து வருகின்றன. அங்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் அரிப்பால் இந்த வீடுகள் சிறிது சிறிதாக இடிந்து விழுந்து வருகின்றன.
இந்தநிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முன்தினம் மாலை கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. கடலில் வழக்கத்தைவிட பெரிய அலைகள் எழுந்து ஆக்ரோஷமாக கரையில் வந்து மோதின. அதன் காரணமாக கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது.
இதில் பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் கடற்கரையோரம் இருந்த மீனவர்களின் பழைய வீடுகளில் 7 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் கரையோரம் இருந்த சுமார் 10 தென்னை மரங்கள் உள்ளிட்ட வேறு சில மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன.
அதுதவிர அந்த கடற்கரையில் மீனவர்கள் தங்களின் வலைகளை பின்னுவதற்காக அமைக்கப்பட்டிருந்த வலைபின்னும் கட்டிடத்தின் பெரும்பகுதியும் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டிடத்திலும் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் தற்போது உள்ளது.
இந்த பகுதியில் பொம்மையார்பாளையம் கடற்கரை பகுதி மட்டுமல்லாமல் பெரியமுதலியார்சாவடி மீனவர் கிராமம், நடுக்குப்பம், தந்திராயன்குப்பம், சின்ன முதலியார் சாவடி ஆகிய கரையோர மீனவ கிராமங்களும் கடல் சீற்றத்தால் ஏற்படும் கடல் அரிப்பால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனை தடுக்க, தமிழக அரசு தூண்டில் வளைவு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி மீனவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.