டெங்கு கொசுப்புழு உற்பத்தி: தனியார் பள்ளி, விடுதிக்கு அபராதம்

வேலூர், காட்பாடியில் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான விடுதி மற்றும் தனியார் பள்ளிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2017-11-12 22:30 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கலெக்டர் ராமன் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான வீடு, கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்குட்பட்ட இடையன்சாத்து பகுதியில் கலெக்டர் ராமன் நேற்று காலை டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பணியை ஆய்வு செய்தார்.

அப்போது வீடு, வீடாகவும், குடிநீர் தொட்டிகளிலும் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகியிருக்கிறதா? என்று பார்வையிட்டார். வேலூர் காந்தி ரோட்டில் உள்ள தனியார் விடுதிகளில் உதவி கலெக்டர் செல்வராஜ் தலைமையில் மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட ஒரு விடுதிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தனியார் பள்ளி

அதேபோன்று காட்பாடி காந்தி நகரில் 1-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையிலான சுகாதார குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, அங்குள்ள ஒரு தனியார் பள்ளி வளாகம் முழுவதும் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பைகளில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பள்ளி நிர்வாகத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மாநகராட்சியின் மற்ற பகுதிகளிலும் டெங்கு கொசுக்களை கண்டறியும் பணி நடந்தது.

மேலும் செய்திகள்