திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 75 பயணிகள் உயிர் தப்பினர்.
தாளவாடி,
சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை மோகனசுந்தரம் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை 10.45 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 23–வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது எதிரே தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பஸ்களின் கண்ணாடியும் உடைத்து நொறுங்கியது. இதில் 2 பஸ்களில் இருந்த 75–க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதனால் திம்பம் மலைப்பாதையில் ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். விபத்துக்குள்ளான 2 பஸ்களையும் அப்புறப்படுத்தினார்கள். அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகியது. வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.